ADDED : நவ 04, 2024 10:38 PM

புதுடில்லி; இந்திய பங்குச் சந்தையில் இருந்து, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்ப பெறுவது தொடர்வதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்தது.
அன்னிய செலாவணி சந்தையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து, 84.11 ரூபாய்க்கு வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்திய பங்குகளை விற்று, டாலரை வாங்குவதில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து, வர்த்தகர்கள் தெரிவித்ததாவது: அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால், வர்த்தக நேரத்தின் துவக்கத்தில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை கண்டது. தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையும் உயரவே, ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது.
இதில் ரிசர்வ் வங்கி தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்தால், மேலும் ரூபாய் மதிப்பு சரியாமல் தடுக்க இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.