ஒற்றைச்சாளர அனுமதி இல்லை தொழில் துவங்க இயலாமல் அவதி மாவட்ட தொழில் மையங்களிடம் அதிகாரம் இல்லை
ஒற்றைச்சாளர அனுமதி இல்லை தொழில் துவங்க இயலாமல் அவதி மாவட்ட தொழில் மையங்களிடம் அதிகாரம் இல்லை
ADDED : ஆக 04, 2025 12:25 AM

சென்னை:சிறு, குறு, நடுத்தர பிரிவில் தொழில் துவங்க, பல்வேறு அரசு துறைகளின் அனுமதி, ஒப்புதல்களை, ஒற்றைச்சாளர முறையில் பெற முடியாததால், தொழில்முனைவோர் சிர மத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:
தமிழகத்தில் தொழில் துவங்கும் பெரிய நிறுவனங்களுக்கு, பல்வேறு அரசு துறைகளின் அனுமதிகளை, ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாக, 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனம் பெற்று தருகிறது.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் மையம் உள்ளது.
அங்குள்ள அதிகாரிகளிடம், தொழில் துவங்குவதற்கு விண்ணப்பம் செய்தால், அவர்களே, ஒற்றைச்சாளர முறையில் பல துறைகளை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று தருவர்.
ஒரு மாதத்திற்குள் அனுமதி தரவில்லை எனில், அதற்காக காத்திருக்காமல், தாங்களாகவே தொழில் துவங்கி விடலாம் என்ற நடைமுறை இருந்தது.
தற்போது, மாவட்ட தொழில் மையங்கள் அதிகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் ஆகிய துறைகளிடம் தனித்தனியே அனுமதி பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டியுள்ளது. பஞ்சாயத்துக்களிடம் கட்டட வரைபட அனுமதி பெற வேண்டியுள்ளது.
எனவே, ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற் றுத் தருவதற்கு, மாவட்ட தொழில் மையங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த அனுமதிகள், விரைவாக கிடைப்பதில்லை.
பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. இதனால், வீண் அலைச்சல், விரைவாக தொழில் துவங்க முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது. ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்கவில்லை எனில், அனுமதி அளித்ததாக கருதி, தொழில் துவங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.