திருமுடிவாக்கம் புதிய தொழிற்பேட்டை குறுந்தொழில்களுக்கு ஒதுக்க திட்டம்
திருமுடிவாக்கம் புதிய தொழிற்பேட்டை குறுந்தொழில்களுக்கு ஒதுக்க திட்டம்
ADDED : மார் 25, 2025 11:20 PM

சென்னை:காஞ்சிபுரம் திருமுடிவாக்கத்தில் அமைக்கப்பட உள்ள புதிய தொழிற்பேட்டையை, குறுந்தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்காக ஒதுக்கப்பட உள்ளது.
திருமுடிவாக்கத்தில், 'சிட்கோ' தொழிற்பேட்டை உள்ளது. அங்கு, 450 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. மேலும் அதை சுற்றிய பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு, 12,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.
இந்நிலையில், திருமுடிவாக்கம் உட்பட ஒன்பது இடங்களில், 398 ஏக்கரில், 366 கோடி ரூபாயில் புதிய தொழிற்பேட்டைகளை, சிட்கோ உருவாக்க உள்ளதாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, திருமுடிவாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்பேட்டையில் உள்ள மனைகளை, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருமுடிவாக்கத்தை சுற்றி ஏராளமான குறுந்தொழில்கள் உள்ளன. எனவே, புதிய தொழிற்பேட்டையில் இவற்றுக்கு மனைகள் ஒதுக்கப்படும். இப்பகுதியில் பெரிய நிறுவனங்கள் பல இருப்பதால், இந்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, ஆர்டர்கள் எளிதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.