ஆயிரம் சந்தேகங்கள் :கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் லாட்டரி வாங்கலாமா?
ஆயிரம் சந்தேகங்கள் :கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் லாட்டரி வாங்கலாமா?
ADDED : மார் 11, 2024 01:00 AM

என் மகன் இங்கே ஐ.டி., துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியதால், 5,000 அமெரிக்க டாலர் சிறப்பு ஊதியம் கிடைக்கும் என்றும்; அதற்கான வரி பிடித்தம் 30 சதவீதம் என்றும் கூறினார். இரவு - பகல் பாராமல் உயிரைக் கொடுத்து வேலை செய்து, இவர்களுக்கு ஏன் வரி கட்ட வேண்டும்? இந்த வரி பிடித்தத்தை ஆண்டு வருமான வரியில் ரீபண்டாக பெற முடியுமா; இல்லை, வேறு எந்த வகையில் அதை பயன்படுத்த முடியும்?
எஸ்.ஆர்.ராஜா, சென்னை
தனிநபர் வேறு, அரசு என்பது வேறு என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் இத்தகைய கேள்வி எழுவதற்கு காரணம். ஒருவர் கூடுதலாக உழைக்கிறார்; திறமையை காண்பிக்கிறார். அதற்கு கூடுதலாக மதிப்பூதியம் பெறுகிறார் என்றால், இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்று யோசிக்க வேண்டாமா?
வாகனங்கள் விரைவாக இயங்குவதற்கு தேவையான சாலைகள் நன்றாக இருக்கின்றன. இரவும், பகலும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. குடிநீர், கழிவுநீர் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வணிக, வர்த்தக சூழல் உயர்வடைந்துள்ளன. நிறுவனங்கள் லாபமடைய உதவும் இணக்கமான தொழில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு தனிநபர் கூடுதலாக வருவாய் ஈட்டுகிறார் என்றால், அவருக்கு உதவும் சூழலை உருவாக்குவது அரசு. அதற்கு ஏராளமான முதலீடுகளும், திட்டமிடலும், செயல் ஊக்கமும் தேவை.
தனிநபர் கட்டும் வரி என்பது, அவரது வளர்ச்சிக்கு நாடு அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாய்ப்புக்கான பிரதியுபகாரம். அது சுமை அல்ல. பல்வேறு முதலீட்டு இனங்கள் உள்ளன; கழிவுகள் உள்ளன. அவற்றையெல்லாம் பயன்படுத்தினால், உங்கள் மகன் கூடுதலாக ஏதேனும் வரி செலுத்தியிருப்பார் என்றால், அது ரீபண்டு ஆகும்.
வங்கிகளில் கணக்கு மற்றும் அட்டைகள் வைத்துள்ளோருக்கு பல சலுகைகள் இருந்தாலும், அவற்றை தெரிவிப்பதில்லை. 'நாமினேஷன்' குறித்து கூட, பழைய கணக்குகளில் விடுபட்டவர்களிடம் தெரிவிப்பதில்லை. ஏன்?
ஆர்.கிருஷ்ணன், சென்னை
அப்படி நான் நினைக்கவில்லை. வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் கதறிக்கொண்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்களை கூப்பிட்டு, நாமினேஷன் படிவத்தை தாக்கல் செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றன.
இன்னொரு விஷயம். வங்கித் துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. புதிய மாறுதல்கள், திருத்தங்கள் என்னென்ன என்பதையெல்லாம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். தங்கள் பணத்தை நிர்வகிக்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவுமே வங்கிகள் உள்ளன.
அவ்வப்போது ஒரு நடை வங்கிக்கு போய் வாருங்கள்; வங்கியாளர்களுடன் பேசுங்கள். செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏதுமிருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். இதனால், வங்கிப் பணியாளர்கள் பலன் அடையப் போவதில்லை. நீங்கள் தான் பயனாளிகள். நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்கலாம்.
நம் நாட்டில் ஆன்லைன் லாட்டரி வாங்குவது, சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளதா? அவற்றை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தலாமா?
ஆர்.தாமோதரன், சென்னை
லாட்டரி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆன்லைன் லாட்டரிக்கு தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; ஒருசில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்துவதை, ஆர்.பி.ஐ., கண்காணிக்கிறது; அனுமதிக்கவில்லை. அதனால், பல வங்கிகள் இத்தகைய பரிவர்த்தனைகளை தடை செய்யும் விதமாக, அந்த கார்டையே தடுத்து விடுகின்றன.
பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் இருப்பது போன்று, 'பெட்டிங்' உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நம் நாட்டில் முழு அனுமதி இல்லை. அதனால், தடை ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். இத்தகைய விஷயங்களில் தெளிவு பிறக்கும் வரை, இவற்றில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
பாதுகாப்பாகவும், நல்ல வருவாய் ஈட்டக்கூடிய வகையிலுமான முதலீடுகள் எவை? வீடு, தங்கப் பத்திரங்கள், வைப்பு நிதி, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீட்டு இனங்களில் முதலீடு செய்தால், எத்தனை சதவீதம் ரிட்டர்ன் வரும் என்று சொல்ல முடியுமா?
எம்.மணிகண்டன், பழனி
வைப்பு நிதி திட்டங்கள், தங்கம், நிலம், வீடு உள்ளிட்டவற்றை பாதுகாப்பான முதலீடுகள் என்று சொல்லலாம். ஆனால், அவை ஈட்டுவது நல்ல வருவாய் தானா என்பது ஒவ்வொருவருடைய கண்ணோட்டம், எதிர்பார்ப்பை பொறுத்தது.
கிடைக்கும் நிகர வருவாய் அடிப்படையில் கணக்கிட்டால், மனை வணிகம் மைனஸ் 0.281 சதவீதம், தங்கம் பிளஸ் 1.792 சதவீதம், வைப்பு நிதி மைனஸ் 1.663 சதவீதம், மியூச்சுவல் பண்டு பிளஸ் 3.174 சதவீதம் ஈட்டுகின்றன. இவற்றை விட, நேரடி பங்கு முதலீடு 5 சதவீதம் வரை லாபம் ஈட்டும்.
ஆனால், மியூச்சுவல் பண்டுகளும், பங்குச் சந்தை முதலீடும் ரிஸ்க் நிறைந்தவை. பாதுகாப்புடன் கூடிய ஓரளவுக்கு நல்ல வருவாய் என்றால், இப்போதைக்கு தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டைத் தான் சொல்ல முடியும்.
வீட்டுக்காக வாங்கிய கடன் மூன்று ஆண்டுகளில் முடிவடைய உள்ளது. அதில் ஒருமுறை 'டாப் அப் லோன்' பெற்று, அதுவும் மூன்றரை ஆண்டுகளில் முடிவடைய உள்ளது. இன்னொரு முறை டாப் அப் லோன் பெற வசதியுள்ளதால், கடன் மற்றும் கையிருப்பைப் பொறுத்து, வீட்டு மனை அல்லது நிலம் வாங்கலாமா? மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் செய்யலாமா? வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா?
கா.உலகநாதன், கோவை
வீட்டுக் கடனோ, டாப் அப் கடனோ எதுவாக இருந்தாலும், இன்றைக்கு குறைந்தபட்சம் 8.50 முதல் 9 சதவீதம் வட்டி கட்டியாக வேண்டும். இந்தக் கடனை கொண்டு உருவாக்கும் மற்றொரு சொத்தான வீட்டு மனையோ, நிலமோ, மியூச்சுவல் பண்டோ, இந்த 8.50 அல்லது 9 சதவீதத்தை விட கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தால் தானே அது லாபம்? அப்படி நடப்பது போல் எனக்கு தெரியவில்லை.
கடன் கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்காதீர்கள். அது தேவையற்ற சிக்கலில் தான் இழுத்துவிடும். இன்னொரு விஷயம், கடன் இல்லாமல் வாழ்ந்து பாருங்கள். அது போன்ற இன்பம் வேறு இல்லை; காற்றில் இறகு பறப்பது போல் இருக்கும்!
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

