ஆயிரம் சந்தேகங்கள்: 'ஆதாரை' வேறு யாராவது பயன்படுத்தி உள்ளனரா என்பதை எப்படி அறிவது?
ஆயிரம் சந்தேகங்கள்: 'ஆதாரை' வேறு யாராவது பயன்படுத்தி உள்ளனரா என்பதை எப்படி அறிவது?
ADDED : மார் 18, 2024 12:55 AM

மனைவியின் பழைய நகையை விற்றால் கிடைக்கும் 7 லட்சத்தை, மகனின் வீட்டுக் கடனை அடைப்பதற்கு வங்கி கணக்கு மூலம் பரிசாக கொடுத்தால், மனைவியோ அல்லது மகனோ வருமானவரி செலுத்த வேண்டுமா?
எஸ்.பொன்னுத்துரை, மதுரை.
வேண்டியதில்லை. பெற்றோர், பிள்ளைகளுக்குத் தரும் பணம், 'கிப்ட்' என்றே கருதப்படும். அதற்கு எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால், பல ஆண்டுகள் பழைமையான ஆபரணத்தை விற்று, பணமாக்கிக் கொடுப்பதற்கு முன்னால், இதிலிருந்து கிடைக்கும் லாபத்துக்கு, 20 சதவீதம் நீண்டகால ஆதாய வரி செலுத்த வேண்டும்.
இதற்குப் பதில், உங்கள் மகனுக்கு நகையையே கொடுத்துவிட்டால், அவர் விற்பனை செய்து கொள்ளலாமே என்று உங்களுக்குத் தோன்றலாம். அவர் விற்பனை செய்தாலும், இந்த மூதாதையர் சொத்துக்கு, அவரும் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
உங்களிடம் இந்த நகைகளை வாங்கிய ரசீதுகள் இல்லையென்றால், 1 ஏப்ரல் 2001 அன்றைய தேதியின் நியாயமான சந்தை மதிப்பை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, இண்டக்சேஷன் கணக்கிட்டு, மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். அதன் பின்னர் மகனுக்குப் பணத்தை அனுப்பி வைக்கலாம்.
எனக்குத் தெரியாமல், என் ஆதார் எண் எங்கேயெல்லாம் முறைகேடாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏதேனும் வலைதளம் இருக்கிறதா?
எம்.ராஜேஷ் குமார், சென்னை
இந்த சுட்டிக்கு https://myaadhaar.uidai.gov.in/ சென்று, உங்களுடைய ஆதார் எண்ணைக் கொண்டு உள்ளே நுழையலாம். செல்போனுக்கு ஓ.டி.பி., வரும். அதை உள்ளிட்டு, இந்த வலைதளத்துக்குள் சென்றால், அங்கே 'ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி' என்றொரு பகுதி வரும். அதைச் சொடுக்கி உள்ளே போனீர்கள் என்றால், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை விபரம் வேண்டும் என்று கேட்கும்.
அதைக் குறிப்பிட்டுவிட்டு சப்மிட் செய்தால், அந்தக் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் ஆதார் அடையாள அட்டை எங்கேயெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற வரலாறு தெரியும்.
அதில் நீங்கள் பயன்படுத்தாமல், சந்தேகத்திற்கிடமான வேறு பயன்பாடுகள் ஏதேனும் இருக்குமானால், 1947 என்ற எண்ணை அழைத்து புகார் செய்யலாம். help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் செய்யலாம். அல்லது https://myaadhaar.uidai.gov.in/file-complaint என்ற சுட்டிக்கு சென்று புகார் அளிக்கலாம்.
சொத்து வரி செலுத்தும் போது, அதற்கு வருமான வரி சலுகை கிடைப்பது போல், ஜி.எஸ்.டி., வகையில் செலுத்தும் வரிகளுக்கு, வரிச்சலுகை பெறுவது எப்படி? ஆண்டுக்கு பல வழிகளில் அரசுக்கு ஜி.எஸ்.டி., வரி செலுத்தும்போது, அதற்கு சலுகை கிடைப்பது தானே நியாயம்? குறிப்பாக, சொத்து பரிமாற்றம் செய்யும்போது, ஆயிரக்கணக்கில் செலுத்தும் வரிப்பணம், தனிமனித வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?
வி.கணபதிராமன், சென்னை.
சரக்கோ, சேவையையோ வாங்கி, அதை இன்னொரு தொழிலுக்குப் பயன்படுத்தினால் தான் 'இன்புட் டேக்ஸ் கிரெடிட்' கோர முடியும். தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இந்தச் சரக்கையோ, சேவையையோ பயன்படுத்தினால், அதற்கு எந்தச் சலுகையையும் கோர முடியாது. ஜி.எஸ்.டி., என்பதும், இன்புட் டேக்ஸ் கிரெடிட் என்பதும் தொழில்துறையினருக்கு. பயனாளிகளுக்கு அல்ல.
மாநில அரசு ஊழியர் ஒருவர், பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். அவர் வருமான வரி பலன்களைப் பெறுவதற்காக என்.பி.எஸ்., எனும் தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்து, ஒருவரே இரண்டு பென்ஷன் திட்டத்தில் சேர முடியுமா? ஓய்வுக்குப் பின் அவர் இரண்டு பென்ஷன் பெற முடியுமா?
ஜே.பாலமுருகன், சென்னை.
தேசிய பென்ஷன் திட்டத்தின் ஆவணங்களின் படி பார்த்தால், சேர முடியும் என்று தான் தெரிகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பின்பற்றும் மாநிலங்களில், பணியாளர்கள் என்.பி.எஸ்., வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரண்டு நிதி பங்களிப்புகளும் இருவேறு இடங்களில் தான் சேகரமாகின்றன. அதற்கான வளர்ச்சியையும் பெறுகின்றன. அப்படிப் பார்க்கும்போது, இரண்டு இடங்களில் இருந்தும் பென்ஷன் கோர முடியும்.
எனக்கு வங்கி வைப்பு நிதியிலிருந்து, வட்டியாக ஆண்டிற்கு 1 லட்சம் ரூபாய் வருகிறது. வேறு வருமானம் எதுவும் இல்லை. நான் வருமான வரி கட்ட வேண்டுமா?
எம்.மேனகா, திருவள்ளூர்.
வேண்டாம். உங்கள் வருவாய்க்கு வரி ஏதும் கிடையாது. பெண்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் நீங்கள் ஏதேனும் கடன் வாங்குவதாக இருந்தாலோ, வெளிநாடு விசா கோருவதாக இருந்தாலோ, அப்போது சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தேவைப்படும். அதனால், வருமான வரி தகவல்களைச் சமர்ப்பித்து 'நில்' ரிட்டர்ன் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த நிதி ஆண்டு முடியப் போகிறது. வரிப் பிடித்தம் இருக்கும்போல் தெரிகிறது.கடைசி நேரத்தில் எப்படிச் சமாளிப்பது?
பி.பத்மினி, சென்னை.
இன்னும் பன்னிரண்டு நாட்கள் இருக்கின்றனவே. முதலில் உங்கள் வருவாயையும், இதுவரை வரி சேமிப்புக்காக செய்துள்ள முதலீடுகளையும் கணக்கெடுத்துப் பாருங்கள். இன்னும் எவ்வளவு பிடித்தம் இருக்கலாம் என்று தோராயமாக கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.
தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தால், வழக்கமான 1.5 லட்சம் கழிவோடு, கூடுதலாக 50,000 ரூபாய் கழிவு கோரலாம். மருத்துவ காப்பீடு எடுத்துக்கொண்டால், இன்னொரு 25,000 ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881

