கோவையில் கிரிக்கெட் மைதானம் தனியாருக்கு 'டிட்கோ' அழைப்பு
கோவையில் கிரிக்கெட் மைதானம் தனியாருக்கு 'டிட்கோ' அழைப்பு
ADDED : நவ 01, 2025 02:34 AM

சென்னை:கோவையில், பொது - தனியார் கூட்டு முயற்சியில், 30 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் வணிக வளாகம் அமைக்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில், சென்னை சேப்பாக்கத்தில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதனால், அங்கு நடக்கும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி, ஐ.பி.எல்., போட்டிகளை பார்வையிட, மாநிலம் முழுதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டதில், ஒண்டிப்புதுார் ஜெயில் ரோடு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
தற்போது, கோவையில் 20.18 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் மற்றும், 10 ஏக்கரில் வணிக வளாகத்தை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க, விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு, 'டிட்கோ' அழைப்பு விடுத்துள்ளது.
அரசு வழங்கும் நிலத்தில், தனியார் நிறுவனம் தன் செலவில் கிரிக்கெட் மைதானத்தை கட்டி, 60 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். பின், அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த மைதானம் குறைந்தது, 25,000 - 30,000 இருக்கைகளுடன், கிரிக்கெட் பயிற்சி அரங்கம், வி.ஐ.பி., அறைகள் உள்ளிட்டவை இடம்பெறும்.
கோவையில், 20.18 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் மற்றும் 10 ஏக்கரில் வணிக வளாகம்
30,000 இருக்கைகளுடன் அமைக்க ஒண்டிப்புதுார் ஜெயில் ரோடு அருகில் இடம் தேர்வு

