டிட்கோ - டாடா டெக்னாலஜிஸ் கோவையில் பொதுவசதி மையம்
டிட்கோ - டாடா டெக்னாலஜிஸ் கோவையில் பொதுவசதி மையம்
ADDED : நவ 23, 2024 10:43 PM

சென்னை:தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம், 'டாடா டெக்னாலஜிஸ்' உடன் இணைந்து, கோவை மாவட்டம், அண்ணா பல்கலை வளாகத்தில், 400 கோடி ரூபாயில், 'டி.என்.இன்ஜின்' எனப்படும் தமிழக பொறியியல் மற்றும் புத்தாக்க மையம் என்ற பெயரில் பொது வசதி மையம் அமைக்க உள்ளது.
இந்த மையம், மேம்பட்ட இயந்திர ஆய்வகம், சேர்க்கை உற்பத்தி உட்பட வளர்ந்து வரும் தொழில்களில், ஒன்பது தொழில்நுட்ப ஆய்வகங்களை உள்ளடக்கியது.
முதல் கட்டமாக, 167 கோடி ரூபாய் செலவில், நான்கு மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கான தொழில்நுட்ப விபரங்களை சேகரிப்பது உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை டிட்கோ துவக்கியுள்ளது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆய்வக கட்டுமானப் பணிகளை துவக்கி, விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வகங்களை, விமானம், மின்சாரம், பரிசோதனை உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் ஆய்வுக்கு பயன்படுத்தலாம்.

