இன்றைய நிலவரம்: அமெரிக்கா 145%, சீனா 125% முடிவுக்கு வராத வரி விதிப்பு போர்
இன்றைய நிலவரம்: அமெரிக்கா 145%, சீனா 125% முடிவுக்கு வராத வரி விதிப்பு போர்
ADDED : ஏப் 12, 2025 12:50 AM

வாஷிங்டன்:அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் புதிய திருப்பமாக, சீன பொருட்களின் மீதான இறக்குமதி வரி 125 சதவீதம் கிடையாது 145 சதவீதம் என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை தொடர்ந்த நிலையில், நாங்கள் சீனர்கள், அடிபணிய மாட்டோம் எனக்கூறி சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி வருகிறது.
இந்நிலையில், உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்த விவகாரத்தில் சீனா தனக்கு போதுமான மரியாதை வழங்கவில்லை என கூறி, அதன் மீதான வரியை 125 சதவீதமாக உயர்த்துவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுக்கான வரி 145 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், 'பென்டனில்' என்ற மருந்து பொருளை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த தவறியதற்காக கனடா, மெக்சிகோ மீது 25 சதவீதமும்; சீனா மீது 20 சதவீதமும் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள 125 சதவீதம் வரி, இதுபோக கூடுதலாக விதிக்கப்பட்டது என்றும்; ஆகவே சீனாவுக்கான மொத்த வரி 145 சதவீதம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மருந்து பொருட்கள், செமிகண்டக்டர், எரிசக்தி பொருட்கள், தாமிரம் ஆகியவற்றுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா 84 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இதன் பிறகு சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தினால், சீனா அதை கண்டுகொள்ளாது என்றும், இனி இது தொடர்ந்தால், அதை காமெடியாகவே கருதுவோம் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து சீனாவின் வர்த்தக அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், “உலக வர்த்தக விதிமுறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளிலிருந்து சீனாவை பாதுகாக்கவே, தற்போது 125 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
“வரி விதிப்பைக் கொண்டு, சீனாவை பொருளாதார ரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணம் நகைப்புக்குரியது” என தெரிவித்துள்ளார்.