தமிழக பாரம்பரிய பொருட்களுக்கு மலேஷியாவில் வர்த்தக மாநாடு தமிழக பாரம்பரிய பொருட்களை பிரபலப்படுத்த திட்டம்
தமிழக பாரம்பரிய பொருட்களுக்கு மலேஷியாவில் வர்த்தக மாநாடு தமிழக பாரம்பரிய பொருட்களை பிரபலப்படுத்த திட்டம்
ADDED : அக் 25, 2025 12:20 AM

சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களை பிரபலப்படுத்தும் வகையில், மலேஷியாவில் சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு நடக்கவுள்ளது.
இதுகுறித்து சென்னையில், மில்லட் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர், மலேஷிய தமிழர் வர்த்தக சங்க தலைவர் பாலகிருஷ்ணன் பத்துமலை ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தின் பாரம்பரிய தயாரிப்புகளுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்கும் வகையில், சர்வதேச தமிழர்கள் வர்த்த மாநாடு, மலேஷியாவில் ஆலம் ஷா என்ற இடத்தில் டிசம்பர் 22 முதல் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, டிச., 23ம் தேதி மலேஷியா வாழ் தமிழர்கள் வர்த்தக சங்கத்தின் 4வது ஆண்டு விழாவும் நடக்கவுள்ளது. விழாவில், 1,000க்கும் மேற்பட்ட மலேஷியா வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கேற்கஉள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருட்களை மீட்டுருவாக்கம் செய்தல், தமிழக தொழில் முனைவோர்களை சர்வதேச தமிழ் வர்த்தகர்களுடன் இணைத்தல், தமிழக பாரம்பரிய தொழில்களை சர்வதேச தமிழ் வர்த்தகர்கள் தங்களது நாட்டில் மேற்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குதல், தமிழகத்தின் பாரம்பரிய தயாரிப்புகளை உலகெங்கும் பிரபலப்படுத்துதல் உள்ளிட்டவை, இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் வீடுதோறும் தொழில் முனைவோர்கள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் இருந்து, சோளம், கம்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், மலைவாழ் மக்கள் தயாரிப்புகள், பனை பொருட்கள், தென்னை பொருட்கள், பாரம்பரிய மூலிகை பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் 55 தொழில் முனைவோர்கள், மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
சென்னையில் இருந்து மட்டும் 22 தொழில் முனைவோர்கள் கண்காட்சியில் அரங்குகள் அமைக்கவுள்ளனர்.

