ADDED : மே 22, 2025 11:51 PM

ரிலையன்ஸ் சோலார் ஆலை
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நடப்பாண்டு சோலார் மாட்யூல் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் துாய்மையான எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடப்பாண்டில் மூன்று பெரிய சோலார் மாட்யூல் ஆலைகளை துவங்க உள்ளதாகவும், சீனாவுக்கு அடுத்ததாக, சோலார் செல் உற்பத்தியில் 14 சதவீத பங்களிப்புடன் உலகின் இரண்டாம் இடம் பிடிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
எம்.டி.என்.எல்., பங்கு 7% உயர்வு
எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் கடன்களை திரும்ப செலுத்த நிதி கேட்டு, தொலைத்தொடர்பு துறை மீண்டும் மத்திய நிதியமைச்சகத்தை அணுகியுள்ளது. இந்த தகவலால், மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவன பங்கு விலை, 6.60 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கு 47.04 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
தேயிலை ஏற்றுமதி உயர்வு
நாட்டின் தேயிலை ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2024ம் ஆண்டில் 7,854 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 கோடி கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்து, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதாக, தேயிலை வாரியத்தின் துணைத் தலைவர் சவுரவ் பஹாரி தெரிவித்து உள்ளார்.
செபி ஆய்வில் இண்டஸ்இண்ட்
முன்பேர வணிக கணக்கு மோசடி புகாரில் சிக்கியுள்ள இண்டஸ்இண்ட் வங்கி விவகாரத்தில், வங்கியின் உயர்மட்ட நிர்வாகிகள் யாரேனும் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக செபி தெரிவித்துள்ளது. வங்கியில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ரிசர்வ் வங்கி விசாரித்து வருவதாகவும், எனினும் பங்கு, பத்திர சந்தையில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதா என்று செபி ஆராய்வதாகவும் கூறியுள்ளது.
புதிய உச்சத்தில் கோதுமை
இந்த ஆண்டு நாட்டின் கோதுமை விளைச்சல் புதிய உச்ச அளவை எட்ட தயாராக உள்ளதாக, இந்திய கோதுமை மற்றும் பார்லி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, வெப்பமான வானிலை காரணமாக கவலைகள் இருந்த போதிலும், காலநிலைக்கு ஏற்ற அதிக மகசூல் தரும் விதைகளின் பயன்பாடு அதிகரித்திருப்பது, உற்பத்தி திறனை மேம்படுத்த உதவியதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ரத்தன் திவாரி கூறினார்.