
விமான நிலையங்களுக்கு ரூ.92,000 கோடி முதலீடு
மத்திய அரசு விமான நிலைய கட்டுமானம் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக 92,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். வரும் 2030ம் ஆண்டுக்குள் உள்நாட்டு விமான பயணியரின் எண்ணிக்கை 30 கோடியை எட்டும் என்றும், இதனை கருத்தில் கொண்டு அரசு முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 157 ஆக உள்ள நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை அடுத்தாண்டு இறுதிக்குள் 200 ஆக உயரும் என்றும் தெரிவித்தார்.
டாடா வாகன விற்பனை 11 சதவீதம் குறைவு
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை, 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டை ஒப்பிடுகையில், இந்த இரண்டாம் காலாண்டில் 3.04 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வர்த்தக வாகன விற்பனை, 19 சதவீதம் குறைந்து, 86,133 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பயணியர் கார்கள் விற்பனை, 6 சதவீதம் குறைந்து, 1.30 லட்சம் வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தேயிலை ஏற்றுமதி 6 மாதத்தில் 23 சதவீதம் உயர்வு
நடப்பாண்டின் ஜனவரி
முதல் ஜூலை வரையிலான அரையாண்டில், தேயிலை ஏற்றுமதி 23 சதவீதம்
அதிகரித்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துஉள்ளது. நடப்பாண்டு ஜனவரி முதல்
ஜூலை வரையிலான காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி, 23.79 சதவீதம் அதிகரித்து,
14.45 கோடி கிலோவைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 11.67
கோடி கிலோவாக இருந்தது. ஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் விலையை
பொறுத்தவரை, நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஒரு கிலோ தேயிலை விலை
256.37 ரூபாயாக இருந்தது. இது கடந்தாண்டில் கிலோ 264.96 ரூபாயாக இருந்ததாக
தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் ஐ.பி.ஓ., அக்.,14ல் துவங்கும்?
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் புதிய பங்கு வெளியீடு, வருகிற 14ம் தேதி திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டுக்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஒரு பங்கின் விலை 1,865 முதல் 1,960 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தையில், வருகிற 22ம் தேதி இந்த பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன. கடந்த 2003ம் ஆண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு பின், இந்த புதிய பங்கு வெளியீடு, நாட்டின் மிகப் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

