எச்.டி.பி., பைனான்சியல் ரூ.12,500 கோடி திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது
எச்.டி.எப்.சி., வங்கியின் வங்கிசாரா நிதி நிறுவனமான 'எச்.டி.பி., பைனான்சியல் சர்வீசஸ்', புதிய பங்குகளை வெளியிட, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. 12,500 கோடி ரூபாய்க்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்.டி.பி.,யில் எச்.டி.எப்.சி., வைத்துள்ள 94.60 சதவீத பங்குகளில், 10,000 கோடி அளவுக்கு பங்குகளை விற்றும், புதிய பங்குகள் வாயிலாக 2,500 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டு செலவுகளுக்காகவும், கடன் வழங்கும் நிதி தொகுப்புக்காகவும் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு உதவி? 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
உக்ரைன் மீதான போரில், ரஷ்யாவுக்கு உதவியதாக 12க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அவற்றில் 'அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்' உட்பட நான்கு இந்திய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. மற்ற இந்திய நிறுவனங்களின் பெயர் இடம்பெறாத நிலையில், அசன்ட் ஏவியேஷன், ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, ராணுவத் தளவாடங்கள் உட்பட, 700க்கும் மேற்பட்ட சரக்கு போக்குவரத்தை மேற்கொண்டதாக, அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. மற்றொரு நாட்டுக்குள் ஊடுருவும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உதவியதற்காக நிறுவனங்கள், தனிநபர்கள் மீது தடை விதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
துபாயில் வீடு, மனை வாங்கியோருக்கு ஐ.டி., நோட்டீஸ்
துபாயில் வீடு, மனை ஆகிய அசையா சொத்துகளை வாங்கி, வருமான வரிக் கணக்கில் அதைக் காட்டாத பல பணக்கார இந்தியர்களுக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்துறையின், அன்னிய சொத்து புலனாய்வு பிரிவு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் 90 நாட்களுக்கு மேல் தங்குவோருக்கு குடியுரிமையும்; 181 நாட்களுக்கு மேல் தங்குபவர்களுக்கு இந்தியா, யு.ஏ.இ., இடையேயான வரி ஒப்பந்தங்களும் பொருந்தும். 90 நாட்களுக்கு கீழ் தங்கியிருந்து, சொத்துகளை வாங்கியவர்கள் பற்றிய விபரத்தை இந்தியாவுக்கு யு.ஏ.இ., அரசு அளித்துள்ளது. அவற்றை ஆராய்ந்த வருமான வரித் துறை, இங்கு வருமான கணக்கில் அவற்றை காட்டாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

