
தினந்தோறும் அதிர்ச்சி தரும் ரூபாய் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, 53 பைசா சரிந்து, வரலாறு காணாத வகையில் 85.80 ரூபாயை எட்டி யது. இதற்கு முன் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, ரூபாயின் மதிப்பு 68 பைசா சரிந்ததே, ஒரே நாளில் அதிகபட்ச சரிவாகும். அதற்கு அடுத்ததாக நேற்றைய தின வீழ்ச்சி இரண்டாம் இடத்தில் உள்ளது.
நம் நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பீடு, அவற்றின் உண்மையான மதிப்பை விட அதிகரித்திருக்கும் நிலையில், பிற ஆசிய சந்தைகளில் குறைவாக உள்ளதால், அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடுகளை தொடர்ந்து திரும்பப் பெறுகின்றனர். மேலும், அமெரிக்க கடன் பத்திர வருவாயும் அதிகரிப்பால், முதலீட்டாளர்களின் பார்வையை அங்கே திரும்பியுள்ளது. மற்றொரு புறம் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இவற்றின் காரணமாக, ரூபாய் தொடர் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. 1 டாலர் 85.80 ரூபாயை தொட்ட நிலையில், பின்னர், சரிவில் இருந்து சற்று மீண்டது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 21 பைசா சரிந்து, 85.48 ரூபாயாக, புதிய வீழ்ச்சியில் நிறைவடைந்தது.

