
2025ல் உலக அளவில் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் - ஐ.நா.,
உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்து ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை காரணமாக, இந்த ஆண்டில் உலக அளவில் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என, எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 2.80 சதவீதமாகவே இருக்கும் என்றும், கடந்த ஆண்டில் இருந்ததில் இருந்து மாறாமல் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
புவிசார் அரசியல் மோதல்கள், அதிகரித்து வரும் வர்த்தக பதற்றங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளில் அதிகரித்த கடன் செலவுகள் ஆகியவை எதிர்காலத்திற்கு குறிப்பிடத்தக்க அபாயங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதால், உலகின் ஒரு பக்கம் ஏற்படும் பாதிப்பு மற்றொரு புறத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்றும் ஐ.நா., தெரிவித்துள்ளது.
'மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கு பி.எல்.ஐ.,யின் 2ம் சுற்று தேவை'
கம்ப்ரசர்கள் மற்றும் மோட்டார்கள் போன்ற தயாரிப்புகளுக்கு உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாம் சுற்றை கொண்டு வர வேண்டும் என, அரசை, உபகரணங்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் மின்னணுவியல், உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் வச்சானி கூறுகையில், கம்ப்ரசர்கள் மற்றும் மோட்டார்கள் தயாரிப்புக்கு பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாவது சுற்றை அரசு கொண்டு வர வேண்டும் என்றார். மேலும், இறக்குமதி மீதான வரிகளை குறைக்க வேண்டும், வணிகம் செய்வதை எளிதாக்க உதவும் வகையில் தரக்கட்டுப்பாட்டு ஆணை மற்றும் பி.ஐ.எஸ்., தரநிலைகளை செயல்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

