
கூட்டு
பேக்கேஜ்டு குடிநீர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிஸ்லரி இன்டர்நேஷனல் நிறுவனம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கால் பதிக்க, அப்பேரல் குழுமத்துடன் கூட்டு சேர்ந்துஉள்ளதாக அறிவித்துள்ளது. துபாயை தலைமையிடமாகக் கொண்ட, உடைகள் மற்றும் பேஷன் குழுமமான அப்பேரலுடன் இணைந்து, முதல்கட்டமாக இந்த ஆண்டே ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் வணிகத்தை பிஸ்லரி துவக்க உள்ளது. லிமனோட்டா, பாப், ஸ்பைசி ஜீரா, ரீவ், சோடா ஆகியவற்றையும் சந்தைப்படுத்தவுள்ளது.
ஆர்வம்
மும்பை, ஆமதாபாத் விமான நிலையங்களில் தரைவழி கையாளுதல் சேவைகள் அளிப்பதற்கான ஏலத்தில் பங்கேற்க அதானி குழுமம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியைச் சேர்ந்த 'ஸெெலபி' நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை, தேசிய பாதுகாப்பு கருதி மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து, டில்லி, ஆமதாபாத், மும்பை உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் 'ஸெலெபி' நிறுவனத்தின் சேவை முடிவுக்கு வந்தது.
குறைந்தது
வங்கதேசத்தில் நீடிக்கும் அரசியல் நெருக்கடி காரணமாக, அங்கிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 2024-25ம் நிதியாண்டில், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா துறை வருவாய் 30 - -35 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக கடன் மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. இந்தியாவின் மருத்துவ சுற்றுலா விசாவில், வங்கதேச நாட்டினரின் பங்களிப்பு 70--75 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முறிவு
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக்கில் தனக்கிருந்த 2.47 சதவீத பங்குகளை விற்று வெளியேறி விட்டதாக, தென் கொரியா கார் நிறுவனமான ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஓப்பன் மார்க்கெட் பரிவர்த்தனை வாயிலாக 552 கோடி ரூபாய்க்கு, 10.88 கோடி பங்குகளை விற்றதாக அது கூறியுள்ளது. ஹூண்டாய் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கியா கார்ப்பரேஷனும், ஓலாவில் இருந்த 2.71 கோடி பங்குகளை 137 கோடி ரூபாய்க்கு விற்று வெளியேறியது.