
கப்பல் வாங்க முடிவு
கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கப்பலின் தேவையை அதிகரிக்கும் வகையில், கடல்வழி எண்ணெய் வினியோகத்தை துவங்க, அரசின் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கப்பல்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐநாக்ஸ்: என்.சி.எல்.டி., ஒப்புதல்
ஐநாக்ஸ் விண்ட் எனர்ஜி நிறுவனத்தை ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்துடன் இணைப்பதற்கு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இணைப்புக்கு பின், ஐநாக்ஸ் விண்ட் எனர்ஜி நிறுவனத்தின் ஒவ்வொரு 10 பங்குகளுக்கும், ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் 632 பங்குகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் குழுமத்தின் பங்கை
அதிகரிக்க இந்த இணைப்பு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை எளிதாக்க வேண்டும்
சுவிட்சர்லாந்தில் இருந்து முதலீடுகளை ஈர்க்க, அதிகப்படியான விதிமுறைகளை நீக்கி, சிறந்த முறைப்படுத்தலுக்கான நடைமுறைகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும். சுவிட்சர்லாந்திலும் விதிகள் கடுமையாக இருப்பதாக தொழில் துறையினர் புகார் செய்வதுண்டு. எனவே, முடிந்த வரை, விதிகளை எளிமையாக்கி, எளிதாக தொழில் புரியும் சூழலை ஏற்படுத்தினால், அதிக
முதலீடுகளை இந்தியா ஈர்க்க முடியும்.
- ஹெலன் பத்லிகர் ஆர்திதா
சுவிஸ் பொருளாதார அமைச்சர்
ஒர்க்லா இந்தியா ஐ.பி.ஓ.,
ஒர்க்லா இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக் காக செபியிடம் விண்ணப்பித்துள்ளது. எம்.டி.ஆர்., ஈஸ்டர்ன் ஆகிய மசாலா பொருட்கள் பிராண்டுகள் இந்நிறுவனத்துக்கு சொந்தமானவை. ஐ.பிஓ., வாயிலாக பங்குதாரர்களின் 2.28 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளதாகவும்,
திரட்டப்படும் தொகை முழுவதும் விற்பனை செய்யும் பங்குதாரர்களுக்கே சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா உடன்பாடு
அமெரிக்கா - சீனா இடையே நடைபெறும் வர்த்தகப் பேச்சில் முக்கிய முன்னேற்றமாக, உடன்படிக்கைக்கான அம்சங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இரு தரப்பிலும் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.கடந்த 5ம் தேதி, இருவரும் தொலைபேசியில் பேசிய நிலையில், லண்டனில் இருதரப்புஅதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அதானி சீனா பயணம்
கவுதம் அதானி கடந்த வாரம் சீனா சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதானிக்கு எதிராக சிவில் மற்றும் குற்ற வழக்குகள் பதியப்பட்ட பின், இதுதான் அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். சீன தொழில்துறை உபகரண உற்பத்தியாளர்களை சந்தித்த அதானி, சோலார் மாட்யூல் உற்பத்தி ஆலையை பார்வையிட்டுள்ளார்.பயணத்தின் போது, உறவினரான சாகர்அதானியும் உடனிருந்துள்ளார்.