UPDATED : ஜூலை 22, 2025 10:59 PM
ADDED : ஜூலை 22, 2025 10:58 PM

கீதா கோபிநாத் விலகல்
பன்னாட்டு நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளி கீதா கோபிநாத், அடுத்த மாதத்துடன் தனது பொறுப்பில் இருந்து விலக உள்ளார். இது தொடர்பாக பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது முந்தைய பணியிடமான ஹார்வார்டு பல்கலையில் பொருளாதார பேராசிரியராக பணியாற்ற கீதா கோபிநாத் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019ல் ஹார்வார்டு பல்கலை பணியை விடுத்து, பன்னாட்டு நிதியத்தின் மூத்த பொருளாதார ஆலோசகராக பணிக்கு சேர்ந்த கீதா, கடந்த 2022ல் முதலாவது துணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதுவே பன்னாட்டு நிதியத்தில் இரண்டாவது உயர் பொறுப்பாகும்.
![]() |
மில்கி மிஸ்ட் ஐ.பி.ஓ.,
தமிழகத்தைச் சேர்ந்த பால் பொருட்கள் விற்பனையாளரான மில்கி மிஸ்ட் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,035 கோடி ரூபாய் நிதி திரட்ட, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இதில் 1,785 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளும்; 250 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளும் வெளியிடப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரட்டப்படும் தொகை, நிறுவனத்தின் கடனை திருப்பிச் செலுத்தவும், உற்பத்தி ஆலை தரம் உயர்த்தல் மற்றும் விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்படவும் உள்ளது.
சாந்தி கோல்டு பங்கு விலை
மும்பையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான சாந்தி கோல்டு இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பங்கு விலை, 189 - 199 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 360 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் ஜூலை 25ம் தேதி முதல் ஜூலை 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திரட்டப்படும் தொகை, ஜெய்ப்பூரில் புதிய ஆலை அமைக்கவும், நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாட்டு செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.