
ஐ.டி.பி.ஐ., பங்குகள் டிசம்பருக்குள் விற்பனை
நடப்பாண்டு டிசம்பருக்குள் ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகள் விற்பனைக்கான ஏல அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத்துறை செயலர் அருண் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வளர்ச்சியை பாதிக்கும் வரி விதிப்பு
இந்திய ஏற்றுமதிகள் மீதான 25 சதவீத வரி விதிப்பால், ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், டயர்கள், ரசாயனங்கள் மற்றும் வைரம் உள்ளிட்ட துறைகளில், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என, மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தனியார் கால் டாக்சிக்கு
மாற்றாக கூட்டுறவு டாக்சி
தனியார் கால் டாக்சிகளுக்கு போட்டியாக, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம், இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் மற்றும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு உள்ளிட்ட எட்டு முக்கிய கூட்டுறவு நிறுவனங்கள் இணைந்து 'பாரத்' என்ற பிராண்டின் கீழ் டாக்சி சேவையை துவக்குகின்றன. கடந்த மாதம் 6ம் தேதி இதற்காக 'மல்டி ஸ்டேட் சஹாகரி டாக்சி கூட்டுறவு லிமிடெட்' என்ற பெயரில் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி துறையினருடன் ஆலோசனை கூட்டம்
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத வரியால், ஜவுளித்துறையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கவும், வரி விதிப்பு குறித்து முன்னணி தொழில் நிறுவனங்களின் கருத்துக்களைப் பெறவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அமைச்சக, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.