
அக்னிபத் வீரர்களுக்கு சிறப்பு தனிநபர் கடன்
இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' திட்டத்தில் குறுகிய காலம் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு, 10.50 சதவீதம் வட்டியில் பிணையமில்லாமல் 4 லட்சம் ரூபாய் வரையிலான சிறப்பு தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தில் அக்னிபத் வீரர்கள் எஸ்.பி.ஐ., சம்பளக் கணக்கைக் கொண்டிருந்தால், எந்த பிணையமும் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை, 10.50 சதவீதம் என்ற குறைந்தபட்ச வட்டியில், எவ்வித செயலாக்க கட்டணமும் இன்றி பெறலாம் என எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக, வங்கி மேலும் தெரிவித்துள்ளது-.
'பிஸ்லரி தொடர்ந்து தனியார் நிறுவனமாகவே செயல்படும்'
இந்தியாவின் பாட்டில் குடிநீர் சந்தையில் முன்னணியில் இருக்கும் பிஸ்லரி நிறுவனம், எப்போதும் ஒரு தனியார் நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும் என, அந்நிறுவனத்தின் துணை தலைவர் ஜெயந்தி சவுகான் தெரிவித்துள்ளார். நிறுவனத்தை, பங்கு சந்தை வாயிலாக பொது நிறுவனமாக்கும் எண்ணம் இல்லை என்றும், புதிய பங்கு விற்பனை வாயிலாக பங்குகளை விற்பனை செய்யப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் மட்டும் 600 கோடி ரூபாய் முதலீடு செய்து, நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாட்டில் குடிநீரில் பெருகி வரும் போலி தயாரிப்புகளை கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பதஞ்சலி நிறுவனத்துக்கு அபராதம்; தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
ஜி.எஸ்.டி., பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றசாட்டுகளின் அடிப்படையில், பதஞ்சலி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 273.50 கோடி ரூபாய் அபராதத்துக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் 19ம் தேதி, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குநரகம் ஜி.எஸ்.டி., பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகக்கூறி, 273.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து பதஞ்சலி நிறுவனம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கின் தீர்ப்பில் அபராதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த உத்தரவு வரும் வரை அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.6,000 கோடி முதலீட்டில் 'ஸ்டார்ட்அப் பார்க்'
ஐக்யூ., வெஞ்சர்ஸ் நிறுவனம், ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் வகையில், 6,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'ஸ்டார்ட்அப் பார்க்' எனும் திட்டத்தை துவங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 50 கோடி ரூபாய் மதிப்பிலான இதன் முதல் அலுவலகம், பெங்களூரில் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திறக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, உள்கட்டமைப்பு, நிதி, வழிகாட்டுதல் மற்றும் கூட்டு நெட்வொர்க்குகளை அணுகுவதில் ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சி நிலையில் உள்ள ஸ்டார்ட்அப்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கு உதவி வழங்கப்படும். மேலும், ஒன்றரை ஆண்டுகளுக்குள், 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு உதவுவதுடன், 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு, இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

