
சிப் தயாரிப்பில் சிறப்பு ரசாயனங்கள் மெர்க் - டாடா எலக்ட்ரானிக்ஸ் பேச்சு
'சிப்' தயாரிப்புக்குத் தேவையான சிறப்பு ரசாயனங்களை வினியோகிப்பது தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'மெர்க்' நிறுவனத்துடன், டாடா எலக்ட்ரானிக்ஸ் பேச்சு நடத்தி வருகிறது. குஜராத்தின் தோலேராவில் 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் தைவானைச் சேர்ந்த பி.எஸ்.எம்.சி நிறுவனத்துடன் இணைந்து, டாடா எலக்ட்ரானிக்ஸ் சிப் தயாரிப்பு ஆலை அமைத்துள்ளது. இந்நிலையில், மெர்க் நிறுவனத்துடனான நீண்ட கால ஒப்பந்தம் வாயிலாக, சிப் தயாரிப்புக்கு, தேவையான நிலையான வினியோக தொடரை உறுதி செய்ய, டாடா எலக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க இறக்குமதி வரி உயர்வு தயாரிப்பு நிறுவன வளர்ச்சி தேக்கம்
இறக்குமதி வரி காரணமாக செலவு அதிகரித்ததால், அமெரிக்க தயாரிப்பு துறை நிறுவனங்களின் வளர்ச்சி, கடந்த ஜூலையில் தேக்கம் அடைந்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் தயாரிப்பு துறை, 0.30 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தது. தற்போது, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலையில் தயாரிப்பு துறை வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
அரிய வகை காந்தத்துக்கு ஓலா மாற்று தொழில்நுட்பம்
அரிய வகை காந்தங்களுக்கு மாற்றாக, 'பெரைட் மோட்டார்' தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியை துவங்கி இருப்பதாக, ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், விரைவான சார்ஜ், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குறைந்த விலையில் 15 ஆண்டுகள் வரை பயன்படுத்த கூடிய புதிய 'பாரத் செல்'லை உருவாக்கி இருப்பதாகவும், ஏ.ஐ.,வசதியுடன் கூடிய 'மூவ்ஓ.எஸ்.,6' மென்பொருளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் வாகன தொழில்நுட்பம் இந்தியா - தைவான் கூட்டு முயற்சி
இந்தியாவில், மின்சார வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், மின் வாகனச் சந்தையில் புதிய உயர் வளர்ச்சியை எட்டவும், தைவானைத் தளமாகக் கொண்ட எஸ்.எம்.சி., எனும் ஸ்மார்ட் சிப் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனுடன், உத்தர பிரதேசத்தை தளமாகக் கொண்ட 'பாவ்னா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.

