
சீனாவின் அரிய வகை காந்தங்கள் ஏற்றுமதி ஜூலையில் 75% உயர்வு
சீ னாவின் அரிய வகை காந்தங்கள் ஏற்றுமதி, கடந்த ஆறு மாதங்களில் மீண்டும் உயர்ந்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு தேவையான முக்கிய கனிமங்களின் வர்த்தகமும், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த ஜூன் மாதத்தை காட்டிலும் 75 சதவீதம் அதிகரித்து, ஜூலையில் 5,577 டன்னை எட்டியுள்ளது. இது, ஜனவரி மாதத்துக்கு பின் ஒரு மாதத்தின் அதிகபட்சமாகும்.
கடல்சார் மேம்பாட்டு நிதியாக ரூ.50,000 கோடி ஒதுக்குகிறது அரசு
இ ந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம், கடல்சார் மேம்பாட்டு நிதியாக 25,000 கோடி ரூபாயும்; கப்பல் கட்டும் குழுக்களுக்கான நிதியாக 25,000 கோடி ரூபாயும் என, மொத்தம் 50,000 கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரவையின் அனுமதி, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் பெறப்படும் என தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டு காலக்கெடுவுடன் இந்நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் நுழைகிறது கடிகார பிராண்டு 'பிராங்க் முல்லர்'
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆடம்பர கடிகார பிராண்டான, 'பிராங்க் முல்லர்' நிறுவனம், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி எரோல் பாலியன் தெரிவித்தார். இதுகுறித்து, அடுத்தாண்டு முதல் காலாண்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்றவர், இந்திய கலாசாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு பதிப்பு கடிகாரங்களை அறிமுகப்படுத்தவும் பிராங்க் முல்லர் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.