
ஜே.பி.,கெமிக்கல்ஸை டோரன்ட் கையகப்படுத்த சி.சி.ஐ., ஒப்புதல்
ஜே.பி., கெமிக்கல்ஸ் அண்டு பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு, இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கடந்த ஜூனில், 19,500 கோடி ரூபாய்க்கு ஜே.பி., கெமிக்கல்ஸ் அண்டு பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்த இருப்பதாக டோரன்ட் பார்மா அறிவித்து இருந்தது. கையகப்படுத்தல் நிறைவடைந்த பின், இந்திய மருந்து தயாரிப்பு துறையின், இரண்டாவது அதிக மதிப்புமிக்க நிறுவனமான டோரன்ட் மாற உள்ளது.
பிலாய் ஜேபி சிமென்ட் மீது திவால் நடவடிக்கைக்கு உத்தரவு
கடனில் மூழ்கி உள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் துணை நிறுவனமான பிலாய் ஜேபி சிமென்ட்சுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ள என்.சி.எல்.டி., எனும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. நிலக்கரி வினியோகம் செய்ததற்கு, செலுத்த வேண்டிய 45 கோடி ரூபாயை செலுத்த தவறியதாக அந்நிறுவனத்துக்கு எதிராக சித்கிரி ஹோல்டிங்ஸ் மனுதாக்கல் செய்திருந்தது. இதனை, விசாரித்த என்.சி.எல்.டி., கட்டாக் அமர்வு, தற்காலிக திவால் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
வேளாண், எஸ்.எம்.இ., துறையில்
ஏ.ஐ., பயன்படுத்த கையேடு
இந்தியாவில் சிறு,குறு, நடுத்தர தொழில் மற்றும் வேளாண்மை துறையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் கையேடுகளை உலக பொருளாதார மன்றம், மத்திய அரசுடன் இணைந்து வெளியிட்டுள்ளன.இதில், எஸ்.எம்.இ., வேளாண்மையில் ஏ.ஐ., பயன்படுத்தி எவ்வாறு உற்பத்தியை மேம்படுத்துவது என்பதோடு, சாண்ட்பாக்ஸ் வெள்ளை காகிதம் எனும் கட்டுப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான சோதனைச் சூழலில் ஏ.ஐ., பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பான கையேடும் இடம்பெற்றுள்ளன.

