
எண்ணெய் பனை பரப்பு 52,113 ஹெக்டேர் அதிகரிப்பு
ந டப்பு நிதியாண்டில் இதுவரை, நாட்டில் எண்ணெய் பனை மரங்கள் பயிரிடப்படும் பரப்பளவு 52,113 ஹெக்டேர் அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக, ஆந்திராவில் 13,286 ஹெக்டேரும், தெலுங்கானாவில் 12,005 ஹெக்டேர் எண்ணெய் பனை பயிரிடும் பரப்பளவு புதிதாக அதிகரித்துள்ளது.
பாமாயில் உற்பத்தியை அதிகரிப்பதுடன், சமையல் எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கத்துடன் தேசிய சமையல் எண்ணெய் பாமாயில் திட்டம், கடந்த 2021 ஆகஸ்டில் துவங்கப்பட்டது. அப்போது, 2,41,000 ஹெக்டேராக இருந்த எண்ணெய் பனை பரப்பளவு, தற்போது 6,00,000 ஹெக்டேராக அதிகரித்து உள்ளது.
செயற்கை நுண்ணறிவு சேவை ரிலையன்ஸ் - மெட்டா கூட்டு
மு கேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் இணைந்து புதிய ஏ.ஐ., சேவை நிறுவனத்தை துவங்கி உள்ளது. புதிய ரிலையன்ஸ் என்டர்பிரைசஸ் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் அதன் வசமும், 30 சதவீத பங்குகள் மெட்டா நிறுவனம் வசமும் இருக்கும்.
இரு நிறுவனங்களும் சேர்த்து, முதல்கட்டமாக 855 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ், பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.
மும்பை துறைமுக மேம்பாடு ஹட்கோ -புரிந்துணர்வு ஒப்பந்தம்
து றைமுக உள்கட்டமைப்புக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பொதுத்துறை நிறுவனமான ஹட்கோ, மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
வழக்கமாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன்களை வழங்கும் ஹட்கோ, தற்போது துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு தன் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி உள்ளது.
ஜவஹர்லால் நேரு துறைமுக பழைய மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஆதரவளிப்பதன் வாயிலாக, இந்தியாவின் உலகளாவிய வர்த்தக இலக்கை எட்டுவதில் பங்களிப்பை வழங்கும்.
நவ., பணவீக்கம் வெளியாகாது அமெரிக்க வரலாற்றில் முதல்முறை
அ மெரிக்காவில், 70 ஆண்டுகளில் முதல்முறையாக, அடுத்த மாதத்துக்கான பணவீக்கம் தொடர்பான அறிக்கை வெளியாகாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க பார்லி.,யில் நிர்வாக செலவுகளுக்கான நிதி மசோதாவை தாக்கல் செய்யாததால், அந்நாட்டின் அரசு நிர்வாகம் நான்காவது வாரமாக முடங்கி உள்ளது.
ஏற்கனவே, கடந்த செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம், ஒன்பது நாட்கள் தாமதமாக நேற்று வெளியான நிலையில், அக்டோபர் மாதத்துக்கான பணவீக்க தரவுகள், அமெரிக்க மத்திய வங்கிக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.

