
'குளிர்பதன வசதியால் இழப்பு குறைவு'
'கோல்ட் செயின்' திட்டத்தின் கீழ் அறுவடைக்கு பிந்தைய பயிரிழப்பு குறைந்துள்ளதாகவும், விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோல்ட் செயின் திட்டம் என்பது, ஒரு பொருளை தயாரித்ததில் இருந்து டெலிவரி செய்யும் வரை, குளிர்பதன வசதியுடன் பராமரிக்கும் வினியோக தொடர் முறையாகும்.
கடந்த 2008 முதல் தற்போது வரை 291 ஒருங்கிணைந்த கோல்ட் செயின் திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆண்டுக்கு 25.52 லட்சம் டன் பராமரிக்கும் வசதி உருவாக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக கிட்டத்தட்ட 1.75 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மின்னணு தயாரிப்பில் எல் அண்டு டி., ?
பொறியியல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் எல் அண்டு டி., மின்னணு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை அருகே 200 ஏக்கர் நிலம் வாங்குவது குறித்து தமிழக அரசுடன் முதற்கட்ட பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாடா குழுமத்தை போலவே அனைத்து விதமான தயாரிப்பு திறனையும் உள்ளடக்கிய நிறுவனமாக உருவெடுக்க எல் அண்டு டி., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தன் துணை நிறுவனங்கள் வாயிலாக ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறைகளுக்கு தேவையான முக்கிய மின்னணு உதிரிபாக தயாரிப்பில் எல் அண்டு டி., ஈடுபட்டுள்ளது. இத்துறைகள் சார்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பிலேயே அது ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சீனாவை இந்தியா முந்தும்'
இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் சீனாவை எட்டுவது அல்லது முந்துவதற்கான வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியென் லுாங் தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பொருளாதார திறனே இதற்கு முக்கிய காரணமாகும் என அவர் கூறினார். லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி கண்ணோட்டம் குறித்து பேசியபோது இதை லீ சியென் தெரிவித்தார். சீனாவின் மக்கள்தொகை சரிந்து வருவதும் முதியோர் எண்ணிக்கை உயர்வும் இந்தியாவுக்கு சாதகம் என அவர் குறிப்பிட்டார்.

