பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து பணி: ரிலையன்ஸ்
பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து பணி: ரிலையன்ஸ்
ADDED : ஜன 13, 2024 12:14 AM

புதுடில்லி:'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், தனது அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி திட்டத்தை துவக்கி உள்ளது.
இதன் வாயிலாக, ரிலையன்ஸ் அதன் பெட்ரோ கெமிக்கல்ஸ் முதல் புதிய ஆற்றல் வரையிலான வணிக நிறுவனங்களில், அவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
'கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்னி 2024' என்ற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து, இளம் பொறியாளர்கள் பயிற்சிக்கான முதல்நிலை ஆட்சேர்ப்பு பணியை, தனது இணையதள பக்கம் வாயிலாக ரிலையன்ஸ் துவக்கியுள்ளது.
இப்பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜன., 11 முதல் 19 வரை வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ரசாயனம், மின்சாரம், இயந்திரம் மற்றும் கருவியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, நடப்பு இறுதியாண்டு பி.டெக்., மற்றும் பி.இ., படித்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பிப்., 5 முதல் 8ம் தேதி வரை ஆன்லைன் வாயிலான மதிப்பீட்டு தேர்விற்கும், இதில் தேர்வானவர்கள் பிப்., 23 முதல் மார்ச் 1 வரை தனிப்பட்ட நேர்காணலுக்கும் அழைக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு மார்ச் இறுதியில் நடைபெறும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
வழக்கமான, வெகு சில கல்லூரிகளில் நடைபெறும் 'கேம்பஸ் இண்டர்வியூ'வுக்கு பதிலாக இத்திட்டத்தால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு பட்டதாரிக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்.