ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியது டிரம்ப் நிறுவனம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கியது டிரம்ப் நிறுவனம்
ADDED : ஜூன் 16, 2025 10:55 PM

வாஷிங்டன் :நெட்வொர்க் சேவையுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை, அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவை இணைப்பு கிடைக்கும் என, அதிபரின் நிறுவனமான, டிரம்ப் ஆர்கனைசேஷன் அறிவித்துள்ளது.
'டிரம்ப் மொபைல்' என்ற பெயரில் சந்தைக்கு வரவுள்ள இந்த நெட்வொர்க் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் திட்டத்தில், பேசுவது, குறுஞ்செய்தி, தரவுகள் சேமிப்பு என அனைத்தையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக, 'டி1' என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனின் விலை, அமெரிக்க டாலரில் 499. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 40,000 ரூபாய். நெட்வொர்க் கட்டணம் மாதத்துக்கு 47 டாலர், இந்திய மதிப்பில் 4,000 ரூபாய்.
அமெரிக்க கொடி பதிக்கப்பட்ட, தங்க நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்றும் இதை வாங்க, முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'அமெரிக்காவிலேயே தயாரான இந்த ஸ்மார்ட்போனை வாங்கி, டிரம்பின் சக்தியை உணருங்கள்' என, இதன் விளம்பரம் தெரிவிக்கிறது.
ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்காமல் அமெரிக்காவில் தயாரிக்க டிரம்ப் வலியுறுத்திய நிலையில், அதிபருக்கு சொந்தமான நிறுவனமே போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது.