இந்தியாவில் தயாரிப்பதை நிறுத்துமாறு 'ஆப்பிள்' நிறுவனத்துக்கு டிரம்ப் அழுத்தம்
இந்தியாவில் தயாரிப்பதை நிறுத்துமாறு 'ஆப்பிள்' நிறுவனத்துக்கு டிரம்ப் அழுத்தம்
ADDED : மே 16, 2025 01:21 AM

புதுடில்லி:இந்தியாவில், ஆப்பிள் நிறுவன உற்பத்தி ஆலைகள் அமைப்பதை கைவிடுமாறு, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் வலியுறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற டிரம்ப், நேற்று முன்தினம் கத்தார் நாட்டில் பேசுகையில், டிம் குக் உடன் உரையாடியதாகக் கூறினார்.
டிரம்ப் மேலும் தெரிவித்ததாவது:
ஆப்பிள் நிறுவனம் இந்தியா முழுதும் உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகிறது. எனக்கு இதில் விருப்பமில்லை.
எனவே, இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைப்பதை நிறுத்த, டிம் குக்கிடம் வலியுறுத்தினேன். இனி வரும் காலங்களில் ஆப்பிள், அமெரிக்காவில் அதன் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும்.
இந்தியா தன்னை தானே பார்த்துக் கொள்ளும். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அங்கு அமெரிக்க பொருட்களை விற்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கு மூன்று ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் இரண்டும்; கர்நாடகாவில் ஒன்றும் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் தற்போது வரை ஒரு ஆலை கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சங்கர் பதிலடி
அமெரிக்க
பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா சம்மதித்துள்ளதாக
டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவுடன்
வர்த்தக பேச்சுகள் தொடர்ந்து வருவதாகவும்; சிக்கலான இன்னும் முடிவு
எட்டப்படாத நிலையே நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். முடிவு நிச்சயம் ஒரு
தரப்புக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.