ADDED : பிப் 11, 2025 11:28 PM

வாஷிங்டன்:அமெரிக்காவின் பழைமையான வெளிநாட்டு ஊழல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க, அதிபர் டிரம்ப் தன் அதிகாரத்தை பயன்படுத்தி கையெழுத்திட்டு உள்ளார்.
எப்.சி.பி.ஏ., எனும் வெளிநாட்டு ஊழல் நடவடிக்கை தடுப்பு சட்டம், 1977ல் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு, அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க நீதித்துறையால், இந்த சட்டத்தின் கீழ்தான், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் இரு அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமெரிக்காவில் சூரிய மின்உற்பத்தி ஒப்பந்தங்களைப் பெற 2,100 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டது.
அதானி மட்டுமின்றி; 50 ஆண்டு கால இந்த சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆராயவும் அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
எம்.பி.,க்கள் கடிதம்
அதானி குழுமத்துக்கு எதிராக லஞ்ச புகார் கூறி, குற்றஞ்சாட்டியது உட்பட, முந்தைய அரசின் சந்தேகத்துக்கு உரிய அனைத்து முடிவுகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, புதிதாக பொறுப்பேற்றுள்ள அட்டர்னி ஜெனரலுக்கு ஆறு எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
பைடன் அரசு மேற்கொண்ட இதுபோன்ற நடவடிக்கைகள், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை சீர்குலைப்பதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நீதித்துறையின் உத்தரவு குறித்து விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வருமாறு அவர்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

