திருவள்ளூரில் 'ஜீரோ கார்பன்' தொழில் பூங்கா சிங்கப்பூருடன் இணைந்து அமைக்க முயற்சி
திருவள்ளூரில் 'ஜீரோ கார்பன்' தொழில் பூங்கா சிங்கப்பூருடன் இணைந்து அமைக்க முயற்சி
ADDED : பிப் 19, 2025 11:50 PM

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில், சிங்கப்பூர் தொழில் அமைப்புகளுடன் இணைந்து, 'ஜீரோ கார்பன்' எனப்படும் கார்பனை வெளியேற்றாத நிறுவனங்கள் தொழில் துவங்கும் வகையில் தொழில் பூங்கா அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் பூங்காக்களை அமைப்பதற்காக, தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. இதன்படி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து, 500 ஏக்கரில், 'நெட் ஜீரோ' தொழில் பூங்கா அமைக்க, அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்த பூங்காவில் உள்ள மனைகள், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உள்ளிட்ட பசுமை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில் பூங்காவுக்கான நிலத்தை, அரசு வழங்கும். கட்டமைப்பு வசதிகளை கூட்டு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். திருவள்ளூரில் நெட் ஜீரோ தொழில் பூங்கா அமைக்க, சிங்கப்பூர் தொழில் அமைப்புகள் மட்டுமின்றி; வேறு பல தரப்பினருடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு, 'டெண்டர்' கோரப்பட்டு, அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், விலைப்புள்ளி வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து, பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.