டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரூ.170 கோடியில் விரிவாக்கம்
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரூ.170 கோடியில் விரிவாக்கம்
ADDED : பிப் 04, 2025 10:30 PM

சென்னை:டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் 170 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட முருகப்பா குழுமத்தின் துணை நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கின்றன.
இந்நிறுவனம், 170 கோடி ரூபாய் முதலீட்டில், 'பைன் பிளாங்கிங்' எனப்படும் உலோகம் சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்புக்கென, புதிய ஆலையை மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது. மேலும், அடுத்தாண்டுக்குள் இதற்கான பணிகளை முடிக்க, இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவுகளில், 161 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியிருந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், தன் பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் தொகையாக பங்கு ஒன்றுக்கு, இரண்டு ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.