துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி
துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி
ADDED : டிச 22, 2024 01:37 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளர்ச்சி திட்டங்கள் குறித்து, ஆணையத் தலைவர் சுசந்த்குமார் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வளர்ச்சி திட்டங்கள்
306 மீட்டர் நீளமும்; 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி, வரும் பிப்ரவரி மாதம் முடிவடையும்
100 முதல் 120 டன் திறன் கொண்டு நகரும் பளு துாக்கி இயந்திரங்கள், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறுவப்பட்டு, இடைக்கால செயல்பாடுகள் துவக்கப்படும்
ஆண்டுக்கு 70 லட்சம் டன் சரக்கு வெளியேற்றத்திற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தை இயந்திரமயமாக்கும் திட்டம் 2026 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
கப்பல் வரும் நுழைவாயிலை, 152.40 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, 15.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. பணி முடிந்ததும், 49 மீட்டர் அகலமும், 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும்
இரண்டாவது வடக்கு சரக்கு தளத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக, ஒரு நாளில் கூடுதலாக 25,000 டன் சரக்குகளை கையாளும் நோக்கத்துடன், 100 டன் திறன் கொண்ட நகரும் பளு துாக்கி இயந்திரம் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் நிறுவப்பட உள்ளது
காற்றாலை இறகுகள் மற்றும் உபகரணங்களை கையாளுவதற்காக, 470 மீட்டர் நீளம் கொண்ட 30 ஹெக்டேர் சேமிப்பு பகுதியுடன் கூடிய ஒரு பிரத்தியேகமான முனையத்தை நிறுவ, துறைமுகம் திட்டமிட்டுள்ளது
501 ஏக்கர் நிலப்பரப்பை நான்கு நிறுவனங்களுக்கு ஒதுக்கி, 41,860 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தி மற்றும் சேமிக்கும் வசதிகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டுஉள்ளது
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியாவை, ஆண்டுக்கு 20 லட்சம் டன் அளவுக்கு கையாளு வதற்கு தேவையான சரக்கு தள வசதி மற்றும் உள்கட்டமைப்பை நிறுவும் பணியில் துறைமுகம் முழு கவனம் செலுத்தி வருகிறது.