துாத்துக்குடி 'வின்பாஸ்ட்' ஆலை ஜூன் மாதத்தில் உற்பத்தி துவக்கம்
துாத்துக்குடி 'வின்பாஸ்ட்' ஆலை ஜூன் மாதத்தில் உற்பத்தி துவக்கம்
ADDED : ஏப் 24, 2025 11:58 PM

சென்னை:வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான வின்பாஸ்ட், அதன் தமிழக உற்பத்தி ஆலையை, ஜூன் மாதத்தில் திறக்கவுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி பாம் ஹட் விவாங் தெரிவித்துள்ளார். இந்த ஆலை, தற்போது துாத்துக்குடியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
வியட்நாம் வாகன சந்தையை தவிர, இந்தியா, இந்தோனேசிஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் சந்தைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். இந்திய உற்பத்தி ஆலை, ஜூன் மாத இறுதிக்குள் திறக்கப்படும்.
போதிய வரவேற்பு இல்லாததால், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில், விற்பனையை அதிகரிக்க இயலவில்லை. அதனால், அமெரிக்காவில் கட்டமைக்கப்படும் உற்பத்தி ஆலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் தமிழக ஆலையில், ஆண்டுக்கு 50,000 கார்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில், 1.50 லட்சம் கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் இந்த ஆலைக்கு உண்டு.
முதல் ஐந்து ஆண்டுகளில், 4,266 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.