கப்பலில் ஆப்ரிக்கா செல்லும் டி.வி.எஸ்., வாகன தயாரிப்புகள்
கப்பலில் ஆப்ரிக்கா செல்லும் டி.வி.எஸ்., வாகன தயாரிப்புகள்
ADDED : நவ 29, 2024 11:17 PM

சென்னை:டி.வி.எஸ். நிறுவனத்தின் 580 மெட்ரிக் டன் எடை கொண்ட, உதிரிபாக பொருட்கள், பைக்குகள், சென்னையில் இருந்து கப்பல் வாயிலாக ஆப்ரிக்காவுக்கு செல்கிறது.
ரயில்வேயில், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே மற்றும் சென்னை துறைமுகம் இணைந்து 6.71 கோடி ரூபாய் செலவில், ஜோலார்பேட்டையில் சரக்கு கையாளும் 'பெரிய ஷெட்' அமைக்கப்பட்டு உள்ளது.
சரக்குகளை கொண்டு செல்ல வசதியாக, ரயில்வேயின் 'கன்கார்' நிறுவனம், சென்னை துறைமுகம், டி.வி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த 'டி.வி.எஸ்., எஸ்.சி.எஸ்., குளோபல்' நிறுவனம் ஆகியவை சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்நிலையில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் 580 மெட்ரிக் டன் எடையுள்ள சரக்குகளை அனுப்பும் முதல் சரக்கு ரயில் சேவை, ஜோலார்பேட்டையில் நேற்று முன்தினம் துவங்கியது.
இந்த சரக்கு ரயிலை சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், எண்ணுார் துறைமுகத்தில் வரவேற்றார். இந்த நிகழ்வில், காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநராக ஐரீன் சிந்தியா மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.