துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 2 நிறுவனங்கள் ரூ.30,000 கோடி முதலீடு
துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 2 நிறுவனங்கள் ரூ.30,000 கோடி முதலீடு
ADDED : செப் 21, 2025 12:32 AM

சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில், 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு வணிக கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்காக, இரண்டு நிறுவனங்களுடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம், குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகரில் நேற்று முன்தினம் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் கொச்சின் ஷிப் யார்டு, மசகாான் டாக் ஷிப்பில்டர் நிறுவன அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.
ஒப்பந்தம் இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று அளித்த பேட்டி:
கப்பல் கட்டும் தளத்தில் முதலீடுகளை ஈர்க்க, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, வழிகாட்டி நிறுவனம், கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத் துடன், 15,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்துடன், 15,000 கோடி ரூபாய் முதலீட்டுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
குழு அமைப்பு இரு நிறுவனங்களின் கப்பல் கட்டும் தளங்களுக்கான முதலீட்டின் வாயிலாக, 55,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். இதில் மறைமுகமாக, 40,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இத்திட்டத்தால், துாத்துக்குடி பிரமாண்ட கப்பல் கட்டும் தளமாக மாற போகிறது. மத்திய அரசுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்த பணிகளை கண்காணிக்க, தலைமை செயலர் உட்பட பல துறைகளின் செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, தொழில் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
1 விரைவில் கடல்சார் தொழிலுக்கான கொள்கையை தமிழக அரசு வெளியிடவுள்ளது
2 இ ரு நிறுவனங்களின் கப்பல் கட்டும் தளங்களுக்கான முதலீட்டின் வாயிலாக, 55,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்
3 கடந்த 4 ஆண்டுகளில், 11.31 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 1,010 ஒப்பந்தங்கள்