
ரசாயன மூலப்பொருள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு
கொ லஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'கிலோ ஒன்று 111 அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 9,768 ரூபாய்க்கு குறைவான ஏ.டி.எஸ் 8 ரசாயன மூலப்பொருள் இறக்குமதிக்கு, வரும் 2026, செப்., 30 வரை கட்டுப்பாடுகள் தொடரும்.
எனினும், ஏற்றுமதி சார்ந்த மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் மருந்து நிறுவனங்களுக்கு இது பொருந்தாது' என தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பெயரை மாற்றும் ஸ்காலஸ் பெங்களூர்
த ன் நிறுவனத்தின் பெயரை 'லீலா பேலஸஸ் ஹோட்டல் அண்டு ரிசார்ட்ஸ்' என மாற்றம் செய்ய பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்து உள்ளதாக ஸ்காலஸ் பெங்களூர் தெரிவித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதல் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பெயர் மாற்றம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம், பெரும்பான்மையான பங்குதாரர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பெயர் மாற்றம் தொடர்பாக சந்தை கட்டுப்பாட்டாளர், நிறுவன பதிவாளர் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.