ADDED : ஏப் 17, 2025 12:13 AM

புனே:உள்நாட்டில், 2 லட்சம் கார்களை தயாரித்த முதல் சொகுசு கார் நிறுவனமாக, 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம் மாறியுள்ளது. இந்த சாதனையை 29 ஆண்டுகளில் இந்நிறுவனம் செய்து முடித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், 1995ம் ஆண்டில் இந்நிறுவனம் ஆலையை அமைத்தது. முதல் 50,000 கார்களை தயாரிக்க 19 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த 1.50 லட்சம் கார்களை, வெறும் 10 ஆண்டுகளில் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உற்பத்தி, கடந்த 10 ஆண்டுகளில் 470 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆலையில், இதுவரை 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 11 கார்கள் இங்கு அசெம்பிள் செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து, 18,928 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
'இ - கிளாஸ்' செடான் கார், நாட்டில் அதிகம் விற்பனையாகும் பென்ஸ் காராகும். மின்சார கார் விற்பனை, 51 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 60 சதவீத பங்கை எஸ்.யூ.வி., கார்கள் வைத்துள்ளன. இந்த நிதியாண்டில், எட்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.