தள்ளாடிய 'டூ - வீலர்' விற்பனை ஏப்ரலில் 17 சதவீதம் சரிவு
தள்ளாடிய 'டூ - வீலர்' விற்பனை ஏப்ரலில் 17 சதவீதம் சரிவு
ADDED : மே 16, 2025 01:18 AM

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வாகன விற்பனை அறிக்கையை, சியாம் என்ற இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
இதில், இருசக்கர வாகன விற்பனை, 16.70 சதவீதம் சரிந்து, 14.59 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மொத்த வாகன விற்பனையும், 13.09 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 21.36 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஏப்ரலில், 18.57 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
உற்பத்தியை பொறுத்த வரை, கடந்த மாதத்தில், 23.18 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு ஏப்ரலை விட 1.70 சதவீதம் குறைவு.
இருசக்கர வாகன உற்பத்தி, 4.10 சதவீதம் சரிந்து, 18.52 லட்சம் வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.
இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது இயக்குநர் ராஜேஷ் மேனன் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரலில் எதிர்பார்த்ததை விட அதிகஅளவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையானதால், கடந்த மாத விற்பனை, பெரிய வீழ்ச்சி கண்டது போல் தெரிகிறது. வரும் மாதங்களில், விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.