சிறுதொழில் நிறுவனங்கள் கண்காட்சி நிதியுதவி பெற 'உத்யம்' பதிவு கட்டாயம்
சிறுதொழில் நிறுவனங்கள் கண்காட்சி நிதியுதவி பெற 'உத்யம்' பதிவு கட்டாயம்
UPDATED : ஜூலை 22, 2025 12:28 PM
ADDED : ஜூலை 21, 2025 10:17 PM

சென்னை : உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் கண்காட் சியில் பங்கேற்று, சிறு , குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த அமைக்கப்படும் அரங்கிற்கு, தமிழக அரசின் நிதியுதவி பெற, 'உத்யம்' பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் புதிய தொழில் துவங்க அரசு துறைகளின் அனுமதியை விரைந்து பெற்று தருவது, தயாரிப்புகளின் சந்தைப்படுத்துதலுக்கு நிதியுதவி செய்வது உள்ளிட்ட பணிகளை, 'பேம் டி.என்.,' எனப்படும் அரசு நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனம் தனது, நிதி ஆதரவு கொள்கை வாயிலாக, நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடக்கும் வர்த்தக கண்காட்சிகள், நிகழ்வுகளில் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்க, தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்கிறது .
தற்போது, கண்காட்சியில் பங்கேற்க நிதியுதவி செய்யும் கொள்கையில் மாற்றங்களை செய்து உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :
நாடு முழுதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த, 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன், மானியம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எனவே இனி, கண்காட்சியில் பங்கேற்க பேம் டி.என்., வழங்கும் நிதியுதவியைப் பெற விரும்பும் நிறுவனங்கள், 'உத்யம்' சான்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்னென்ன சலுகைகள்
உள்நாட்டு கண்காட்சி பங்கேற்க
ரயில் பயண கட்டணம் 75-100 சதவீதம் திரும்ப வழங்கப்படும்
தங்குமிட வசதிக்கு ஒரு நாளைக்கு, 3,000 ரூபாய்
அரங்கு அமைக்க, 1-2 லட்சம் ரூபாய்
வெளிநாட்டு கண்காட்சியில் பங்கேற்க
விமான டிக்கெட் கட்டணம் 55,000 -1,00,000 ரூபாய்
தங்குமிட வசதிக்கு ஒரு நாளைக்கு, 3,000- 6,000 ரூபாய்
அரங்கு அமைக்க 1.50 - 3 லட்சம் ரூபாய்