ADDED : செப் 20, 2024 01:17 AM

சென்னை:சிறு தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் மத்திய அரசின், 'உத்யம்' இணையதளம் சரிவர செயல்படாததால், நிறுவனங்களை பதிவு செய்ய முடியாமல், தொழில்முனைவோர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நாடு முழுதும் உள்ள சிறு தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 'உத்யம்' சான்று வழங்குகிறது.
இது, நிறுனங்களின் சுய விபரங்களை உள்ளடக்கியது. இதற்கு, 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு உள்ள நிறுவனங்களுக்கு கடன், சலுகை போன்றவற்றை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யாத நிறுவனங்களை, 'உத்யம்' தளத்தில் பதிவு செய்யுமாறு, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சில தினங்களாக, உத்யம் இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமல் தொழில் முனைவோர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
உத்யம் இணையதள பக்கம் திறப்பதற்கு அதிக நேரமாகிறது. பின், 'ஆதார்' எண்ணை பதிவிட்டு, ரகசிய குறியீட்டு எண்ணை செலுத்தி உள்ளே நுழையும் போது, ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் விபரங்களை பதிய முடிவதில்லை. எனவே, விரைவாக பதிவு செய்யும் வகையில் இணையதளத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.