'வேலையின்மை தரவுகள் இனி மாதந்தோறும் வெளியிடப்படும்'
'வேலையின்மை தரவுகள் இனி மாதந்தோறும் வெளியிடப்படும்'
ADDED : ஏப் 22, 2025 06:57 AM
புதுடில்லி; வேலையின்மை குறித்த தரவுகள் காலாண்டுக்கு பதிலாக, வருகிற மே 15ம் தேதி முதல், மாத அடிப்படையில் அரசு வெளியிடும் என்று புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் வேலையின்மை குறித்த பெரிய அளவிலான தரவு சேகரிப்பு மற்றும் வெளியீடுகள் இல்லை.
இதுவரை, நகர்ப்புற வேலையின்மை குறித்த தரவுகளை காலாண்டு அடிப்படையிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலையின்மை தரவுகளை ஒருங்கிணைத்து, ஆண்டின் அடிப்படையிலும் அரசு வழங்கி வந்தது.
அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மாதாந்திர அடிப்படையில் இந்த தரவுகளை அரசு வெளியிட உள்ளது.
கிராமப்புறங்களுக்கான கணக்கெடுப்பை காலாண்டு அடிப்படையில் துவங்கவும், சேவைகள் துறை நிறுவனங்களின் கணக்கெடுப்பின் முடிவுகளை அடுத்த ஆண்டு முதல் வெளியிடவும், அரசு முடிவு செய்துஉள்ளது.
மேலும், முறைசாரா துறை குறித்த தரவுகளை காலாண்டு அடிப்படையில் வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.