ADDED : ஜன 29, 2025 11:30 PM

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் எத்தனாலுக்கான விலையை, மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
இதன்படி, சி பிரிவு கனமான வெல்லப்பாகுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எத்தனாலின் விலை, லிட்டர் ஒன்றுக்கு 56.58 ரூபாயிலிருந்து, 57.97 ரூபாயாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
நடப்பு அக்டோபர் மாதம் இறுதி வரை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் எத்தனாலுக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலந்து விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கலப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த முயற்சி, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், அன்னிய செலாவணியை சேமிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
அதேவேளையில் எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்யும் வகையில், தற்போது அதன் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு அக்டோபர் மாதத்துக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு, அதை அடைவதில் உதவிகரமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனால் கலப்பு வாயிலாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.13 லட்சம் கோடி ரூபாய் சேமித்துஉள்ளன.
அதேபோல 193 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளது.
முக்கிய தாதுக்களை கண்டெடுக்க வழிவகை செய்யும் தேசிய முக்கிய தாதுக்கள் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 16,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை, 18,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் முக்கிய தாத்துக்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனிம ஆய்வு, சுரங்க வேலை, செயலாக்கம் என தாதுக்கள் சம்பந்தமான அனைத்து நிலைகளும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். முக்கிய கனிம ஆய்வுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.