ஜி.எஸ்.டி., ஏய்ப்பு என மோசடி சம்மன் மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை
ஜி.எஸ்.டி., ஏய்ப்பு என மோசடி சம்மன் மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை
ADDED : ஜன 29, 2025 11:45 PM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., விதிமீறல், ஏய்ப்பு தொடர்பாக மோசடியாக அனுப்பப்படும் நோட்டீஸ் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு, வரி செலுத்துவோரை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நிதி அமைச்சக அறிக்கை:
மோசடி பேர்வழிகள் வரி செலுத்துவோருக்கு போலியான ஆவண அடையாள எண், அதாவது டி.ஐ.என்., பதிவிட்டு, அதிகாரப்பூர்வ லோகோவை அச்சடித்து, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு எனக் கூறி நோட்டீஸ் அனுப்புவது தெரிய வந்துள்ளது.
போலியான ஜி.எஸ்.டி., சம்மன்களுக்கும், ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் உறுதிப்படுத்தி உள்ளது.
அசல் ஜி.எஸ்.டி., சம்மன்களை போலவே வடிவமைக்கப்பட்ட இந்த போலி நோட்டீஸ்களில், மோசடியான டி.ஐ.என்., எண்கள் இடம் பெறுவதால், அதை அசல் என வரி செலுத்துவோர் நம்பும் வகையில் உள்ளது.
இது குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்குமாறும்; முறையாக சரிபார்க்காமல் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இது போன்ற போலி சம்மன் பெறப்பட்டதும், சி.பி.ஐ.சி., இணையதளத்தில் சரிபார்த்து, போலி என தெரிந்ததும் புகார் அளித்தால், மோசடி பேர்வழிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

