அமெரிக்காவின் போர்பன் விஸ்கி இறக்குமதி வரி 50 சதவிகிதம் ஆக குறைப்பு
அமெரிக்காவின் போர்பன் விஸ்கி இறக்குமதி வரி 50 சதவிகிதம் ஆக குறைப்பு
ADDED : பிப் 16, 2025 02:11 AM

புதுடில்லி:இனிப்பு சுவையுடன் கூடிய அமெரிக்காவின் மிகவும் பிரபலமான 'போர்பன்' விஸ்கிக்கு, இந்தியா வரி சலுகையை அறிவித்துஉள்ளது.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான போர்பன் விஸ்கி, அதன் இனிப்பு தன்மைக்கு பெயர் பெற்றதாகும். சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த விஸ்கி அமெரிக்காவில் மட்டுமே தயாராகிறது. தற்போது இந்த விஸ்கிக்கு இந்தியா இனிப்பான சலுகையை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இருதரப்பு பேச்சு நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன், வர்த்தகம் மற்றும் வரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருதரப்பு அதிகாரிகள் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து, போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை, இந்தியா 50 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த வியாழனன்று, வருவாய் துறையால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், போர்பன் விஸ்கி மீதான சுங்க வரி, 150 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வரி குறைப்பானது, போர்பன் விஸ்கிக்கு மட்டுமே பொருந்தும் என்றும்; இறக்குமதி செய்யப்படும் பிற அனைத்து வகை மதுபானங்களுக்கும் தொடர்ந்து 100 சதவீத வரி விதிப்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.நாட்டின் மதுபான இறக்குமதியில், நான்கில் ஒரு பங்கு அதாவது 25 சதவீதம் அமெரிக்க போர்பன் விஸ்கியாக உள்ளது.கடந்த 2023 - 24ல் மட்டும், 21.75 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்தது.

