மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்களுக்கு கிராமங்களில் பெரிதாக வரவேற்பில்லை
மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்களுக்கு கிராமங்களில் பெரிதாக வரவேற்பில்லை
ADDED : மே 27, 2025 05:47 AM

புதுடில்லி : மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்களுக்கு, கிராமப்புறங்களில் பெரிய வரவேற்பில்லை என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இவற்றால் கிடைக்கும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நுகர்வு அதிகரித்திருந்தாலும், கிராமப்புற மக்களை அந்த அளவுக்கு கவரவில்லை.
கடந்த 2023ம் ஆண்டு, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. சிறுதானியங்களின் பயன்களை எடுத்துரைக்கும் வகையில், நாடு முழுதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஆய்வு
இவற்றின் தாக்கத்தை கண்டறிய ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற நுகர்வோர் இடையே, ஐ.ஐ.எம்.ஆர்., எனும் சர்வதேச சிறுதானிய ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளுக்கு நகர்ப்புறங்களில் அதிக வரவேற்பு உள்ளதும்; கிராமப்புறங்களில் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படியே அவை பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரிய வந்துஉள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எளிதாகக் கிடைப்பதாலும், ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக உள்ளதாலும், நகர்ப்புறங்களில், பதப்படுத்தப்பட்ட சிறுதானிய பொருட்களுக்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில், பாரம்பரிய முறைப்படியே சிறுதானியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சவால்கள்
பொதுவாக அரிசி, கோதுமை ஆகியவற்றுக்கு மாற்றான பிரதான உணவாகவே அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு பெரிய வரவேற்பில்லை.
ஆய்வின் முடிவில், அனைத்து வகையான சிறுதானியங்களின் சாகுபடி, சந்தை தேவை மற்றும் விவசாயிகளின் லாபம் போன்றவை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இருப்பினும், பணியாளர் செலவு, குறைவான கிடங்கு வசதி மற்றும் பதப்படுத்துதல் ஆலை உள்ளிட்ட சவால்கள் நிலவுகின்றன.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தக்கவைக்க, உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில அளவில் சரியான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு வரவேற்பு
கிராமப்புறங்களில் பாரம்பரிய பிரதான உணவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
சிறுதானியங்களின் சாகுபடி, சந்தை தேவை, லாபம் அதிகரித்துள்ளது
பணியாளர் செலவு, குறைவான கிடங்கு வசதி, பதப்படுத்தும் ஆலை இன்மை ஆகிய சவால்கள் உள்ளன