ADDED : ஜூலை 09, 2025 11:10 PM

புதுடில்லி:வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் குறித்து, அமெரிக்காவின் 'வைஸ்ராய் ரிசர்ச்' நிறுவனம் வெளியிட்ட எதிர்மறை செய்தியால், வேதாந்தா குழும நிறுவனங்களின் பங்கு விலை, நேற்று எட்டு சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.
வைஸ்ராய் ரிசர்ச் வெளியிட்ட 87 பக்க அறிக்கையில், வேதாந்தா ரிசோர்ஸ், பொன்சி அல்லது பிரமிடு திட்டம் போல செயல்படுவதாகவும்; இதனால், வேதாந்தா குழுமமே திவால் ஆகும் நிலை வரலாம் என்றும் தெரிவித்தது.
வேதாந்தா குழும அமைப்பே, நிதி அடிப்படையில் நீடிக்கத்தக்கதல்ல என்றும்; கடன் வழங்கியவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வேதாந்தா பங்கு விலை 7.70 சதவீதமும் அதன் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் 5 சதவீதமும் சரிவு கண்டன.
இந்நிலையில், வைஸ்ராய் ரிசர்ச் அறிக்கை, தவறான நோக்கத்தில் வெளியிடப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என, வேதாந்தா குழுமம் விளக்கம் அளித்துள்ளது. தங்கள் குழும நிறுவனங்களின் நற்பெயரைக் கெடுக்கும் கெட்ட நோக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட தவறான, முற்றிலும் பொய்யான பிரசாரம் இது என்றும் தெரிவித்துள்ளது.
* ஹிண்டன்பெர்க் நிறுவனம் கலைக்கப்படுவதாக அதன் நிறுவனர் அண்மையில் அறிவித்த நிலையில், இந்திய முன்னணி குழுமத்தை குறிவைத்து தற்போது வைஸ்ராய் ரிசர்வ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
*திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் செய்யும் முதலீட்டை, ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் ஒருவகையான மோசடியான தொழில், பொன்சி அல்லது பிரமிடு திட்டம் எனப்படுகிறது. அதாவது, முறையான வணிகம் செய்து லாபம் ஈட்டாமல், நடத்தப்படும் தொழில்.