இந்தியாவிலிருந்து காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவிலிருந்து காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு
ADDED : பிப் 05, 2025 11:34 PM

புதுடில்லி:இந்தியாவில் விளையும் பழங்கள், காய்கறிகள் தற்போது 123 நாடுகளின் சந்தைகளை எட்டியுள்ளன. இதுவரை இல்லாத அளவாக 47.30 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த 2019 முதல் 2023ம் ஆண்டு வரை, காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி அவற்றின் எடை அடிப்படையில் புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக, மத்திய வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான, ஏ.பி.இ.டி.ஏ.,வின் பல்வேறு உதவிகள் இதற்குக் காரணம் என, கூறப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு, வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த அமைப்பு நிதி உதவி வழங்குகிறது.
இந்திய காய்கறிகள், பழங்களுக்கு உலக சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக அளவில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
ஏ.பி.இ.டி.ஏ.,வின் நிதி உதவியில், உலகத் தரம் வாய்ந்த ஏற்றுமதி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன முறையில் தரம் பிரித்தல் மற்றும் பேக்கிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய பழங்கள், காய்கறிகள் 17 புதிய சந்தைகளை விரைவாக சென்றடைந்துள்ளன.
பிரேசில், ஜார்ஜியா, உகாண்டா, பப்வா நியூ கினி, செக் குடியரசு, கானா ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன.
சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பு, சந்தை நிர்வாகங்களுடன் தொடர் பேச்சு, வாங்குவோர் - விற்போர் சந்திப்புகள் ஆகியவற்றின் வாயிலாக, ஏற்றுமதி 47.30 சதவீதம் உயர்ந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
காய்கறி, பழங்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் விவசாய அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய உருளைக்கிழங்கு, வெங்காயம் செர்பியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி
பேபி கார்ன், வாழைப்பழங்களை கனடா அதிகளவில் வாங்குகிறது
இந்திய மாதுளைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் அதிக வரவேற்பு