உச்சம் தொட்ட வாகன ஏற்றுமதி; கார், பைக், ஆட்டோ அபாரம்
உச்சம் தொட்ட வாகன ஏற்றுமதி; கார், பைக், ஆட்டோ அபாரம்
UPDATED : ஜூலை 22, 2025 06:39 AM
ADDED : ஜூலை 21, 2025 10:25 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வாகன ஏற்றுமதி, 22 சதவீதம் உயர்ந்துள்ளதாக, இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 11.93 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதியான நிலையில், நடப்பு நிதியாண்டில், 14.57 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பயணியர் கார் ஏற்றுமதி வரலாறு காணாத அளவில், வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது, ஏற்றுமதி 13 சதவீதம் உயர்ந்து, 2.04 லட்சம் பயணியர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் மாருதி சுசூகி நிறுவனம், 96,181 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 37 சதவீதம் அதிகம். ஹூண்டாய் நிறுவனம், 48,140 கார்களை ஏற்றுமதி செய்து, இரண்டாம் இடத்தில் உள்ளது. மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, இலங்கை, நேபாளம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், இந்திய கார்களின் தேவை அதிகரித்துள்ளது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய கார் ஏற்றுமதி உயர்ந்து வருகிறது.
இருசக்கர வாகன ஏற்றுமதி, 23 சதவீதம் உயர்ந்து, 11.37 லட்சம் வாகனங்களும், மூன்று சக்கர வாகன ஏற்றுமதி, 34 சதவீதம் உயர்ந்து, 95,796 வாகனங்களும், வர்த்தக வாகன விற்பனை, 23 சதவீதம் உயர்ந்து, 19,427 வாகனங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

