UPDATED : ஆக 08, 2025 06:43 AM
ADDED : ஆக 08, 2025 12:14 AM

புதுடில்லி: ஜூலை மாத வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் விற்பனை அறிக்கையை, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மாத வாகன விற்பனை, 4.31 சதவீதம் குறைந்தது.
கடந்த ஆண்டு ஜூலையில், 20.52 லட்சம் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூலையில், 19.64 லட்சம் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்., விக்னேஷ்வர் கூறியதாவது:
மூன்று மாதங்களாக தொடர் ஏற்றத்தில் இருந்த வாகன விற்பனை, கடந்த மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. இருசக்கர வாகனங்கள், பயணியர் கார்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.
இருசக்கர வாகன விற்பனை, 6.48 சதவீதம் குறைந்துள்ளது.
பயணியர் கார் விற்பனை, 0.91 சதவீதம் குறைந்துள்ளது. ஆடி மாத வினியோகம், புதிய கார் வருகை, அதிக சலுகைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, கிராமப்புற விற்பனை உயர்ந்தது. அதேசமயம், நகர்ப்புற விசாரிப்புகள் மற்றும் தேவை குறைவாக இருந்தது.
வர்த்தக வாகன விற்பனை 0.23 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது குறைந்த அளவிலான வளர்ச்சியாக இருந்தாலும், நகர்ப்புற விற்பனையை அதிகரித்துள்ளது. புதிய அறிமுகங்கள், மொத்த ஆர்டர்கள், அதிக இருப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள். கனமழை, குறைந்த சிமென்ட், நிலக்கரி போக்குவரத்து, கடன் தாமதம் ஆகியவை கிராமப்புற விற்பனையை பாதித்தன.
டிராக்டர் விற்பனை, 10.96 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த மாதத்தின் அதிக வளர்ச்சி கண்ட பிரிவாகும். அதிகரித்த விவசாய மானியம், போதிய பருவமழை, கிராமப்புற வருமானம் ஆகியவை முக்கிய காரணம்.
இவ்வாறு தெரிவித்தார்.