வேலுார் மினி டைடல் பார்க் ஒரே நிறுவனத்துக்கு குத்தகை
வேலுார் மினி டைடல் பார்க் ஒரே நிறுவனத்துக்கு குத்தகை
ADDED : நவ 05, 2025 11:47 PM

சென்னை:வேலுாரில், 32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டடம், ஏ.ஜி.எஸ்., ஹெல்த்கேர் என்ற நிறுவனத்திற்கு முழுமையாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மினி டைடல் பூங்காக்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. அதன்படி, விழுப்புரம், சேலம், துாத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை, காரைக்குடியில் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வேலுாரில், 32 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுரடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதன் வாயிலாக, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த வல்லுநர்கள் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வேலுார் மினி டைடல் பூங்காவை, ஏ.ஜி.எஸ்., ஹெல்த்கேர் என்ற நிறுவனம் முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு தள ஒதுக்கீட்டு ஆணையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
விழுப்புரம், சேலம், ----------------துாத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், திருவள்ளூரில் மினி டைடல் பூங்காக்கள்
திருவண்ணாமலை, காரைக்குடியில் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது
ராசிபுரத்தில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணி துவக்கம்.

