ADDED : நவ 05, 2025 11:54 PM

சென்னை:வீல்ஸ் இந்தியா நிறுவனம், சென்னை அருகே ஆந்திராவின் மாம்பட்டு பகுதியில் உள்ள புதிய ஆலையில், டிராக்டர் சக்கரங்களை உற்பத்தி செய்து, ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் டிராக்டர் சக்கரங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 100 கோடி ரூபாய் முதலீட்டிலான இந்த ஆலையில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஏற்றுமதி துவங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவட்ஸ் ராம் கூறியதாவது:
இந்த ஆலையில் உற்பத்தியாகும், முதல் தொகுப்பு டிராக்டர் சக்கரங்கள், இந்த காலாண்டுக்குள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும். உள்நாட்டு சந்தைக்கு, பெரிய மற்றும் சிறிய டிராக்டர் சக்கரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டில், டிராக்டர் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் பிரிவில் இருந்து 1,500 கோடி ரூபாய் வருவாய் பெற்று உள்ளோம். இது, எங்களின் மூன்றில் ஒரு பங்கு வருவாய் ஆகும்.
இத்துறையில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

